Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

தரப்பட்டுள்ள அவகாசம்.

ஜபார்

---------------------------------------

திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து சுவடுகளை விழுங்கியபடி போகிறோம்.

பத்து வருடங்களுக்கு முன்னர் 'திறக்கப்படாத தீப்பெட்டிகள்' கவிதைத் தொகுப்பு மூலம் நமக்கெல்லாம் அறிமுகமான கவிஞர் ஜ்பார் அவர்களின் இரண்டாவது தொகுப்பான 'தரப்பட்டுள்ள அவகாசம்' நூலை தனது இரண்டாவது வெளியீடாகக் கொணர்வதில் வி.ஜே. பதிப்பகம் மகிழ்ச்சியடைகிறது.

பரவலாகப் பேசப்படும் 'ஆகவே' சிற்றிதழ் ஆசிரியராக, விமர்சகராக, சிறுகதை எழுத்தாளராக, கவிஞராக, நல்ல நண்பராக எனப் பல்வேறு தளங்களில் சம ஆளுமையுடன் இயங்கும் இவரின் இக்கவிதைகள் 1987-1990 காலகட்ட 'இருண்ட நாட்களின்' துயரந்களை மீள்வோட்டம் செய்வன.

சிறு சிறு பொறிகளாக நமக்குத் தரிசனம் கொள்ளக் கிடைக்கும் இக் கவிதைகள் அவை எழுதப்பட்ட காலத்து நிகழ்வுகளையும் மௌனித்திருந்த கோபாவேசங்களையும் பெரும் தீயாய் மூட்ட வல்லவையாய் உள்ளதே சிறப்பம்சமாகும்.

இத்தொகுப்பு பற்றிய அபிப்பிராயங்களை வி.ஜே. பதிப்பகம் பரவலாக எதிர்பார்க்கிறது.

இத்தொகுப்பு வெளிவர ஒத்துளைப்பு வழங்கிய மு. பொன்னமபலம், கேசவன் போன்றோருக்கும் நன்றிகள்.

வை. ஜெயமுருகன்

சு. இராஜதுரை

வி. ஜே. பதிப்பகம்.

திருக்கோணமலை.

June 1996

-------------------------------------------------

ஜபாரின் "தரப்பட்டுள்ள அவகாசம்" கவிதைகள் தனித்துவமானவை.

"எனது நெருப்பு எரியத்த் தொடங்கி வெகுகாலமாயிற்று

அணைந்து எரிந்து அணைந்து

எரிந்து அணைந்து எரிந்து

எரிந்தபடிதான் இருக்கிறது

அணைந்தே போகாதபடி"

இப்படி ஒரு கவிதை "தரப்பட்டுள்ள அவகாசம்" கவிதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இதை இக்கவிதைத்தொகுதியின் குறியீடாகவும், இக்கவிதைத்தொகுப்பின் ஆசிரியரான ஜபார் அவர்களிடம் எமக்குத் தெரியாது மூண்டெழத் தொடங்கி இதுவரை நெடிதுயர்ந்து வந்துள்ள கவிதாசக்தியின் பூர்வீகமாகவும் கொள்ளலாம்.

இவரிடம் எரியத் தொடங்கிய கவிதா நெருப்பு எத்தகையது? கவிதா ஹோம குண்டத்தில் அணையாது வளர்க்கப்பட்ட இதீயின் பின்னணியால் உச்சாடனம் செய்யப்படும் மந்திரம் என்ன?

எண்ப்த்தேழுகளின் முற்பகுதியிலிருந்து எண்பத்தெட்டுக்களின் பிற்பகுதி வரையில் எழுதப்பட்ட இக்கவிதைகள் அக்காலத்தில் தமிழ் மண்ணில் வாழ்ந்த புத்திஜீவி ஒருவனின் கொதிநிலை அடைந்த மனவெளிக்காட்டலாகவும், அதே நேரத்தில் ஒவ்வொரு பொதுமகனும் தன்னால் புரிந்துகொள்ள முடியாது தனக்குள்ளேயே ஜீரணித்துவிட்ட உணர்வுகளின் பொதுப்பதிவாகவும் நிற்பதோடு, இவற்றுக்கும் மேலாக இத்தனை மன அவலங்களின் மத்தியிலும், இவற்றுக்கெல்லாம் தீர்வுகாண்பது போல் தன் சுயத்தின் அடிநுனி தேடிய ஒருவனின் ஆய்வின் ஆவணமாகவும் இது நிற்பதே மிக முக்கியமானதாகும்.

மேலும், "தரப்பட்டுள்ள அவகாசம்" தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகள் எவற்றுக்கும் தலைப்பிடப்படாததால் இவை, இவ்வுணர்வுகளின் பலவர்ணம் காட்டும் கூட்டு பிம்பமாக நிற்கின்றனவென்றால் மிகையாகாது.

"பெருவெளியில் சஞ்சரிப்பதே சுதந்திர முழுமை

அதனால்தான்

சுமைகள் தவிர்த்துக் கட்டுக்களை விடுவிக்கத்

துடிக்கிறேன்"

இக்கவிதைத் தொகுப்பின் ம்ந்திரம் இதுவே. அதாவது விடுதலைமுணர்வும் அதன் வழி வரும் பலதள இருப்பும், அதற்கெதிராக கிளம்பும் தடைகளை மீறும் போராட்டமுமே. ஏதோ விதத்தில் இத்தொகுப்பின் அநேக கவிதைகள் விடுதலையின்-அதை நோக்கிய வேட்கையின் அதிர்வுகளாகவே உள்ளன.

"முன்னைய வசந்தத்தின் சேமிப்பில்

பச்சை நிறத்திடமிருந்து

அன்னியப்பட்டுப் போகாத சடைத்த செடி

ஒற்றைப் பூவைத் தலையில் சுமந்து

மலட்டினை மீறிய பூரிப்புடன்

பாதிப் பகுதி பட்டுப்போன நிலையில்

பசுமையினை ஒருபுறம் தாங்கிய

நெடிதான மரம்

இருப்பில் விசுவாசமுள்ள

ஒரு தெருப்பாடகனாய்

மயானத்தின் மேல்

முகவ்ரியிழக்கும் புல் வெளியில்

தனித்து மேய்ந்தபடி

ஓர் ஆட்டுக்குட்டி

மயானத்தைக் கடக்கும்

மின்சாரக் கம்பிகளில்

தேடலில் சோர்ந்துபோன

ஒரு செண்பகம் வெறுமை படர்ந்திட

அதையும் மீறிப் பறக்கின்ற பருந்தின்

வட்டத்துள் சிக்கிய மனம்

வானமிழந்த வீட்டு நினைவோடு"

இத்தொகுதியில் ஐந்தாவது கவிதையாக மேற்படி கவிதை, நான் குறிப்பிட்ட விடுதலை, இருப்பு என்பவற்றின் கோடி காட்டலோடு அவற்றின் சுமூக எழுச்சிகளுக்குத் தடைபோடும் பிரச்சினைகளையும் காட்டுவாதாக உள்ளது.

எல்லா உயிர்களிடத்தும் வாழ்வதற்கான பிரயத்தனமும் முனைப்பும், பச்சை நிறத்திடமிருந்து அந்நியப்பட்டுப் போகாது "ஒற்றைப் பூவைத் தலையில் சுமந்து மலட்டினை மீறிய பூரிப்புடன்" நிற்கும் செடியைப் பற்றிக் கூறிச்செல்லும் வரிகளும், "பாதிப்பகுதி பட்டுப்போன நிலையில் பசுமையினை ஒருபுறம் தாங்கிய இருப்பில் விசுவாசமுள்ள தெருப்பாடகனாய்" என்று நெடிய மரம் பற்றிக் கூறும் வரிகளும் எல்லா உயிர்களிடத்தும் முனைப்புக் கொள்ளும் இருப்புப் பற்றிப் பேசுகிறது.

"இருப்பில் விசுவாசமுள்ள தெருப்பாடகனாய்" என்று வரும் அடிகள் மிகவும் கவனிப்புக்குரியவை. எல்லாவற்றுக்கும் இருப்பில் விசுவாசம். இதை எழுதிய கவிஞ்னுக்கும் (தெருப்பாடகன்) இதே வேட்கை தான். வாழ்க்கை நிதந்தரமற்றதெனக் காட்ட "மயானத்தின் மேல் புல் மேயும் ஆட்டுக்குட்டி" படிமமாக வருகிறது. அதேவேளை மரணத்தை வெல்ல முயலும் இன்றைய அறிவியலின் தோல்வியைக் காட்ட "மயானத்தைக் கடக்கும் மின்சாரக் கம்பிகளில் தேடலில் சோர்ந்துபோன செண்பகத்தின் வெறுமை படர்கிறது." என்னும் வரிகள் நிற்கின்றன.

ஆனால் எவை எப்படி இருந்தபோதும் இவற்றையும் மீறி இவற்றுக்கெல்லாம் தீர்வாக அடியோடும் விடுதலையில் லயிக்கவிழையும் மனிதனின் மனநிலையை, "அதையும் மீறிப் பறக்கின்ற பருந்தின் வட்டத்துள் சிக்கிய மனம்: வானமிழந்த வீட்டு நினைவோடு" என்று அடுத்து வரும் வரிகள் காட்டிச்செல்கின்றன. பருந்தின் வட்டங்கள் கூட விடுதலைக்கு எல்லை தான். அதனால் தான் "வானமிழந்த வீட்டு நினைவோடு" என்று அதற்கும் அப்பால் அவாவி நிற்கிறது விடுதலையின் வேட்கை கொண்ட மனம். இது இக் கவிதையில் நான் காணும் ஒரு கருத்துப் பரிமாற்றம். இன்னும் பல அர்த்தவளம் நிறைந்த அழகான கவிதை இது.

அடுத்து ஒரு முக்கிய கேள்வி.

விடுதலை என்பதும் இருப்பு என்பதும் வெவ்வேறானவையா? ஒன்றா?

வெவ்வேறானவை என்று நினைத்தால் நாம் விடுதலை பற்றியோ இருப்புப் பற்றியோ எதுவும் அறியாதவர்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில் விடுதலை இல்லாமல் இருப்பு என்பது இருக்கப்போவதில்லை. ஒருவனிடம் எவ்வளவுக்கெவ்வளவு விடுதலை அதிகரிக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவன் தன் தன் இருப்பை விசாலப்படுத்துகிறான். இன்னும் தெளிவாகச் சொல்வதானால் "இருப்பு" என்பதே விடுதலை தான். இதன் வெளிக்காட்டலாகவே "தரப்பட்டுள்ள அவகாசத்தின்"கவிதைகள் நிற்கின்றன.

இதோ இருபத்தைந்தாவது கவிதையில் வரும் சில வரிகள் இதைத் தெளிவுறக் காட்டுகின்றன.

"...தொடக்கம் எதுஎன்றும் இன்றி

உச்சி அல்லாத

ஒரு புள்ளியில் நின்று

குதித்துக்க் கொண்டிருப்பேன்

......இறப்பு இன்றி

ஏதோ ஒரு புள்ளியில்

உயிர்ப்புடன் இருப்பேன்."

தொடக்கம் உச்சி அல்லாதது எது?இறப்பில்லாத புள்ளி எது?

விடுதலையும் "இருப்பும்" ஒன்றென மிக நுணுக்கமாகச் சுட்டிச் செல்லும் கவிதை இது.

இனிவரும் அடுத்த கேள்வி. விடுதலை பற்றியும் இருப்புப் பற்றியும் ஒருவன் எப்போது பிரக்ஞை கொள்கிறான்? இருப்பியல்வாதியான சாத்தர் (Satre) இது பற்றிக் கூறுகையில், "எவ்வளவுக்கெவ்வளவு ஒருவனுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு அவன் தனது இருப்பையும் விடுதலையையும் உணர்கிறான்" என்கிறான். அதாவது தூக்குத் தண்டனை பெற்ற கைதி ஒருவன் தனது தண்டனை நெருங்க நெருங்க தனது இருப்பையும் விடுதலையையும் குடுதலாகத் தரிசிப்பவனாகிறான்

இதோ ஒருவன் அனுபவிக்கும் பிரச்சனைகளின் உக்கிரத்தை கவிஞர் அழகாய் தனக்கே உரிய பாணியில் தருகிறார்.

"மிதமிஞ்சிய சுமைதாங்கி நடக்கிற

ஒரு கழுதையின் முதுகு என் மனம்

பல வகைத் துயரங்களுடன்

துடைக்கவும் அப்புறப்டுத்தவும்

சிந்தனை ஆலாய்ப்பறக்கும்

கனத்தலின் தாங்கமுடியாமை

எழுந்து இலக்கின்றி நடக்க வைக்கும்

அலைச்சல்கள் ஓயா அலைச்சல்கள்

பெருமழையெனத் தொடர்ந்து

ஈவிரக்கமின்றிக்

கொட்டோ கொட்டென்று"

இத்தனைக்கும் மத்தியில்தான் ஒருவன் தன் இருப்பையும் விடுதலையும் தரிசிக்கிறான் என்பதை பின்வரும் வரிகள் காட்டுகின்றன.

"முட்டியோ மோதியோ

தலைகீழாய் நின்றபடியோ

என் தரிசிப்பிற்கு சுதந்திரம் இருப்பின்

அதுவே போதும்"

மேலும் "மூச்சை இழக்கத் தரப்பட்டுள்ள அவகாசத்தைக் கூட இம் முயல்தலுக்கே தந்துவிடுகிறேன்" என்கிறார் கைஞர். எனின் இதுபற்றிய அவரின் தேடல் புலனாகும்.

2

கவிதை, கதை, ஓவியம், இசை, சிற்பம் என்று கலைஞர்கள் ஈடுபடும் சிருஷ்டி இயக்கத்தின் அர்த்தம் என்ன?

ஒரு விஞ்ஞானி ஒரு பொருளைக் கண்டு பிடிக்கும் முயற்சியில்எடுத்துக்கொள்ளும் குறிப்புக்கள் போலவே, ஒவ்வொரு கலைஞனும் தன்னைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் எடுத்துக் கொள்ளும் குறிப்புக்களாகவே அவனது சிருஷ்டிகளை நாம் நோக்க வேண்டும். ஒரு சிலரே கலைச் சிருஷ்டியின் இந்நோக்கை புத்திபூர்வமாக உணர்ந்து செயல்படுகின்றனர். ஆனால் அநேகர் இத்தகைய பிரக்ஞை எதுவுமின்றி, ஏதோ ஒரு உள் தூண்டலின் பணிப்பில் செயல்படுகின்றனர். அவர் அவர் நிற்கும் பார்வைத்தளத்திற்கேற்ப அவர் அவர் தற்கண்டுபிடிப்பின் (சுயத்தை அறிதல்) அண்மையிலும், தூரத்திலும் நிற்கலாம். இந்நிலையில் அவர் சிருஷ்டிகள், அவர் வாழும் காலத்தின் சமூக, பொருளாதார, அரசியல் சூழல் அவர் முயற்சிக்கு ஏற்படுத்திய சார்பான-எதிரான போக்கின் ஆவணப்படுத்தலாக அமையும்.இந்த ஆவணப்படுத்தலைன் கலைத்தன்மை கூட அவர் நிற்கும் தளங்களின் ஆழங்களைப் பொறுத்தது. எது எப்படி இருப்பினும் இந்தியாவைக் கண்டுபிடிக்கப்போன கொலம்பஸ், வழி தப்பி அமெரிக்காவுக்குப் போய், அதை இந்தியாவென நினைத்து அங்கிருந்தவர்களை இந்தியர்கள் என அழைத்தது மாதிரி, ஒவ்வொரு கலைஞனும் இருப்பின் வழிகாட்டியாக நிற்கும் கலையின் உள்தூண்டல் புரியாது. வழிதப்பிப் போய் பிழையான கண்டுபிடிப்புகள் செய்து, அவற்றையே உண்மையென்றும் இடைதரிப்புக்களை முடிவுகளென்றும் பறை சாற்றும் கலைஞர்க்ளே இன்று அதிகம்.

தரிசனம் மிக்கவன் தன் கலைத்தூண்டலின் தன்மை அறிந்து தனக்கு எதிராகவும் சார்பாகவும் நிற்கும் சூழலை ஊடுருவிக் கணக்கெடுத்தவனாய் நேராகவே தன் இருப்பை நோக்கிப் பயணம் செய்கிறான். எவ்வளவுதான் ஒரு கவிஞன் இயற்கை, சமூக, சூழல் பற்றிய விபரங்களை அழகிய சொற்களால் வர்ணித்துக் கவிதை வடித்த போதும், தன் கலையுணர்வின் பிரதான நோக்கான தற்கண்டுபிடிப்பின் வாகனமாக அவட்டை அவன் ஆக்காவிட்டால் அவன் தன் கலையுணர்வைத் துஷ்பிரயோகம் செய்தவனேயாவான். உண்மையான கலைஞன் தன் இருப்பை, தன் ஒவ்வொரு ஆக்கத்தின் மூலமும் ஊடுருவித்தொட முனைகிறான் என்பது மட்டுமல்லாமல் படிப்பவர் ஒவ்வொருவரிடமும் அந்த உத்வேகத்தைத் த்ப்ற்ற வைக்கிறான். இந்த உத்வேகத்தின் இறுதி முடிவு ஒவ்வொருவனையும் தத்தம் இருப்பை நோக்கி இட்டுச் செல்கிறது. அந்தா இருப்பே சகலதின் இருப்பாகவும் விடுதலையாகவும் விரியும் பேருண்மையில் மானிட நேயத்தின் அர்த்தமும் சகல உயிர்களிடத்தும் நாம் கொள்ளும் அன்பின், இரக்கத்தின் அர்த்தமும் தெளிவாகிறது.

"விட்டு விடுதலையாகி நிற்கும்-அந்தச்

சிட்டுக்குருவியைப்" பற்றிப் பாரதி பாடும் போதும்

"அக்கினிக் குஞ்சொன்றை கண்டேன்" என்று ஆகும் போதும்

"காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள்

கடலும் மலையும் எங்கள் கூட்டம்" என்று களிகொள்ளும் போதும்

அவன் தன் இருப்பையே - விடுதலையையே - எங்கும் காண்கிறான். அந்தக் களிபேருவகை உணர்வை எல்லோரிடமும் தொற்ற வைக்கிறான். இவனே கலைச் சிருஷ்டியின் உள் உந்துதலின் நோக்கை புத்தி பூர்வமாகத் தெரிந்து கொண்டு அதன்வழியே செயற்படும் உன்னத கலைஞன்.

இதற்கடுத்து வருபவர்கள் கலை உந்துதலைப் புத்திபூர்வமாக உணராத போதும், தம் உள்ளுணர்வாய் தம் சிருஷ்டிகளை அத்தகைய நோக்கின் பால் செயற்படுத்துவோர். இவர்கள் தவிர்ந்த ஏனையோர் எல்லாம் இடைத்தரிப்பாளர்கள். பிழையான தம் கண்டுபிடிப்புக்களை உண்மையெனப் பிரசாரம் செய்யும் கலைத் துஷ்பிரயோகிகள்.

இவர்களுள் ஜபார் என்னும் கவிஞர் எந்த ரகத்தைச் சேர்ந்தவர்?

நிச்சயமாய் அவர் முதல் ரகத்தைச் சேர்ந்தவர் என்பதில் ஐயமில்லை. இவர் இடைத்தரிப்பாளரோ மாறாட்டக் கண்டுபிடிப்பாளரோ அல்லர். அதனால்தான் தனது பன்னிரண்டாவது கவிதையில் பிரக்ஞைபூர்வமாக இல்லாவிட்டாலும் பொங்கியெழும் உள்ளுணர்வின் வழிகாட்டலில் பின்வருமாறு கூறுகிறார்:

"கூடாரமடித்து உட்கார்ந்து விடுகின்ற

தளைகளை அணிந்த கனவுகளைத்

தூரே வீசிவிட்டு

வெறுமையுற்ற கைகளுடனும்

மனத்துடனும் " போனாலும் கனவுகளைக் கண்டு இடைத்தரிக்காது செல்லும் வீர்யம் இதில் தெரிகிறது. இதே உள்ளுணர்வு வழிகாட்ட மீண்டும் சொல்கிறார்.

"திசைகளின் சுருக்குக் கயிறுகள் அறும்

சந்திப்புகளுக்கப்பாலும் நீளுகிற

பெருவெளியின் வியாபிப்பில் எனது பயணிப்பு

வலுப்பெறும்" என்று கூறும் போது காலம் இடம் என்பவற்றை ஊடறுத்துத் தன் தேடலை நடத்தும் உத்வேகம் வெளிவருகிறது.

இருபத்தேழாவது கவிதையில் கவிஞர் நான் மேலே கூறிய முதல் ரகக் கவிஞனின் பூரண சுயப்பிரக்ஞையுடன் தன் இருப்பின் தேடலில் இறங்குகிறார்.

"தேடலின் வியாபிப்பில்

உள்ளவைகள் சிறியனவாக

புதிய தரிசனங்களில்

என் பழைய முகங்கள்

உதிர்ந்து போகின்றன" என்று கூறுமவர் தொடர்ந்து,

"புலன்கள் இசைகிற

தொலைவுகளுக்கப்பால்

என் மனக் குதிரை

மிக அவதானமாக

புதியன தேடலில்....." என்று வளர்த்துச் சென்று,

"திசைகள் தறிபட்டு

எல்லைகள் நளுவிப்போய்த்

தொலைவு நீளுகிறபோது

நான் பரிநிர்வாணமாய்

நடஏது கொண்டிருப்பேன்

அனைத்திலும்

இருட்டு

அவசர அவசரமாக

ஆடைகளைக் கழற்றிவிட்டு

நிர்வாணமாகிக் கொண்டிருகிறது."

என்று அழகாகத் தன் தேடலில் இயல்பு கெடாமல் முடிக்கிறார்.

"பரிநிர்வாணமாக

நடந்து செல்வேன் அனைத்திலும்" என்பது அர்த்தபுஷ்டியான வார்த்தைப் பிரயோகம். இத்ன் மூலம் என் விடுதலையை அனைத்திலும் காண்கிறேன் என்பது மட்டுமல்ல நான் அனுபவிக்கும் விடுதலையே-இருப்பே- அனைத்துக்கும் பொதுவானது என்பதும் ஆகிறது.

"இருட்டு

அவசர அவசரமாக

ஆடைகளைக் கழற்றிவிட்டு

நிர்வாணமாகிக் கொண்டிருகிறது" என்று கூறும் போது இன்னோர் முக்கியமான படிமம் வந்து விடுகிறது. அதாவது இரவில் அஞ்ஞானி தூங்கும் போது ஞானி விழித்திருக்கிறான் என்னும் கருத்தின் மெல்லிய கீற்று இக்கூற்றில் தெரிந்து பல அர்த்தங்களைக் கற்பிக்கிறது.

"தரப்பட்டுள்ள அவகாசம்" தொகுப்பில் அடங்கியுள்ள இந்நீண்ட கவிதையும் ஏனையவையும் உண்மையான கலைஞன் ஒருவனின் கலைசிருஷ்டி என்பது அவனது சுயதேடலின் குறிப்புகளே என்பதற்கு தகுந்த உதாரணமாய் அமைந்துள்ளது கவனத்திற்குரியது.

3

"தரப்பட்டுள்ள அவகாசம்" நூலில் அடங்கியுள்ள கவிதைகள் எழுதப்பட்ட காலம் தமிழ் பிரதேச அரசியல், பொருளாதார, சமூக, கலை கலாசார நிலைகளை பலவித இக்கட்டுக்குள்ளாக்கிய காலம். இந்திய அமைதிப்படையின் வரவு பல அனர்த்தங்களை விளைவித்திருந்த காலம்.

இத்தகைய சூழலிலும் கலைஞன் ஒருவன் தன் தேடுதலை நடத்தும் போது அவனுக்குச் சார்பாக - எதிராக நிற்கும் புறக்காரணிகளால் ஏற்படும் மன அவசங்கள் அவ்ன் கலைச் சிருஷ்டிகளில் ஆவணப்படுத்தப்படுகின்றன. பாரதியின் இதேவகை ஆத்மீகத் தேடல் சுதந்திரப் போராட்டகால இந்தியாவின் சகல நிலைகளையும் ஆவணப்படுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் "தரப்பட்டுள்ள அவகாசம்" ஒரு குறுங்கவிதைகளின் தொகுப்பு. மேலும் இக்கவிதைகள் எழுதப்பட்ட காலத்துத் தமிழ் மண்ணின் நிலைமைகளைத்தான் சித்தரிக்கிறது என்பதற்கான முழுச் சான்றுகளையும் இத்ல் காண முடியாது. ஆனால் இதில் சித்தரிக்கப்படும் கலைஞன் ஒருவனின் மன அவஸ்தைகள், மனமுறிவுகள், ஆன்மீகவயப்பட்ட தேடுதல், விசாரணைகள் எல்லாம் இன்று உலகெங்கும் உள்ள புத்திஜீவிகளின் பொதுப்பண்பாக உள்ளது. இது கவிதை தொகுப்பின் பலம் என்றே கூறலாம்.

மேலும் இத்தொகுப்பில் அடங்கியுள்ள சில கவிதைகள் தான் வாழும் சூழலின் தனித்தன்மைகளை, போராட்டங்களை, பிரச்சனைகளை உள்வாங்கி எழும் கலா உச்சப் ப்டைப்புகளாக பரிணமிக்கும் வளங்களை கொண்டிருந்தும் சந்தர்ப்பம் அளிக்கப்படாது குறுகத்தறிக்கப்பட்டுள்ளன. இதற்கு உதாரணமாக "என் தவம் தொடங்கியாயிற்று" என்னும் இருபதாவது கவிதையைக்க் குறிப்பிடலாம். இக்கவிதை தமிழ்ப் பிரச்சனைகளை உள்ளடக்கிய பெருங்காவியமாகவே விரியக்கூடிய வேர்கள் இருந்தும் அது வளர்க்கப்படாதது குறுகத்தறிக்கப்பட்டதான உணர்வு எனக்குள். இதே வகை உணர்வு இருபத்தாறாவது கவிதையான "கைக்குள் வசப்பட முடிந்த" என்ற கவிதையையும், முதலாவது கவிதையான "வழிநெடுகிலும் உதிர்ந்து கொண்டிருக்கிறது சாம்பல்" என்ற கவிதையையும் சொல்லலாம்.

இனி இக்கவிதைகளில் கையாளப்படும் மொழிநடை பற்றியும் நாம் சிறிது கவனம் கொள்ள வேண்டும். உணர்வு - கருத்து ஆகிய இருதரப்பட்ட வார்ப்புக்களின் ஊடகமாக இயங்கும் மொழி, "தரப்பட்டுள்ள அவகாசம்" தொகுப்பில் பின்னதினாலேயே அதிகம் போஷிக்கப்படுவதாகத் தெரிகிறது. அதனால் உணர்வுகளால் மெழுகப்பட்டவற்றையே கவிதையாகக் கண்டவர்களுக்கு, இது ஒரு வித்தயாசமாகத் தெரியலாம். இன்னும் சிலருக்கு வரண்ட தன்மையைத் தருவதாகவும் இருக்கலாம். ஆனால் வேறுசிலர் கருத்தை மினுங்க விட்டு உணர்வு இக்கவிதைகளில் உள்ளடங்கி ஓடும் அழகை வியந்து ரசிக்கலாம். ஆனால் தமிழுக்கு அதிகமாகத் தேவைப்படும் அறிவின் நிமிர்வுக்குரிய வார்த்தைகள், சொற்கட்டு இக் கவிதைகளை அழகுபடுத்துவனவாக உள்ளன. மேலும் புதுச் சொற் பிரயோகங்களும் புதுவித படிம உண்மைகளும் ஆங்காங்கே இக்கவிதைகளுக்கு அழகூட்டுகின்றன. "வெளிற்ற நினைத்து", "தரிசிப்புக்களுக்கு உருக்களாய்", "வெளிச்ச நோக்குகை", "வார்த்தைகள் உடுத்தியிருக்கிற ஆடைகள்" போன்ற சொற் பிரயோகங்கள் இதற்கு உதாரணம்.

இறுதியாக புதுக்கவிதையில் இன்று அரிதாகவே கையாளப்படும் சந்த இசை பற்றியது. உணர்வுகளுக்கேற்ப ஓசைமாற்றம் என்பது புதுக்கவிதையில் இன்று மிக அரிதாகவே காணப்படுகிறது. எல்லாப் புதுக்கவிதைகளும் ஒரே ஓசைக் குவியல்களாகவே உள்ளன. இது ஏன்? உணர்வுகளின் ஏற்ற இறக்கங்களுக்கேற்ப, புதுக்கவிதைகள் சந்த வேறுபாடுகளைத் தரித்துக்கொள்ளும் பரிசோதனையைச் செய்தவர் மிகச் சிலர் என்றே கூற வேண்டும். இக்குறைபாடு முக்கியமானது. இதன் நிவர்த்தி, இது பற்றிய தேவை அறிந்து பிரக்ஞை கொள்வோரின் கையிலேயே உண்டு.

"தரப்பட்டுள்ள அவகாச"த்தில் வரும் "இருத்தல்" என்று தொடங்குகின்ற முப்பத்திரண்டாவது கவிதையும் "காதலி" என்று தொடங்குகின்ற முப்பத்தி மூன்றாவது கவிதையும் ஓர் உள்ளார்ந்த சந்த இசை ஒலிப்பனவாய் உள்ளாதால் ஏனையவற்றிலிருந்து இயல்பு வித்தியாசமாய்த் தெரிகின்றன. இப்படி இயல்பு கெடாமல் வந்த ஓசை வார்ப்புக்குரிய கவிதைகள் இன்னும் வெளிவர வேண்டும். எது எவ்வாறாயினும் "தரப்பட்டுள்ள அவகாசம்" தமிழுக்கு ஆற்றவிருக்கும் பங்களிப்பு சிறியதோ பெரியதோ என்பதை விட தனித்துவமானதாய் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

மு. பொன்னம்பலம்

புங்குடுதீவு.

----------------------------------------------------------------------

பிராந்திய ஆதிபத்தியத்தின்

முதற் படுகொலைக்கு இரையான

பிரம்படி ஒழுங்கை மக்களின்

நினைவுகளுக்கு

----------------------------------------------------------------------------------

வழிநெடுகிலும் உதிர்ந்து கொண்டிருக்கிறது

சாம்பல்

எரிகின்ற என் சிகரெட்டிலிருந்து

கிண்ணத்தைத் தவறவிட்டு

சிதைவின் முழுமையுணராது

அழுத்தமற்ற பாதப் பதிவுகளுடன்

நகர்கிறது வாலிபம்.

-----------------------------------------------------------------------------------

தனிமையின் பொருட்டு

கிளைகள் விரித்த மரத்தின் கீழே

உட்கார்ந்திருக்கிறேன்

என்னை அழுத்தி

என் மீது உட்கார்ந்தபடி

நிழல்

நான் நகர்ந்து விடாதபடி

என்னுழ் இயக்கம் நிகழ

எனது நிழல் இருட்டை வரவழைத்து

ஒது கணம் புரண்டு உருள

சூரியனின் பிறப்பையடுத்த நகர்வு

விழிகளைக் கசக்கித் திறக்க

மறுபடியும் என்னை அழுத்தி

என் மீது உட்கார்ந்தபடி

நிழல்

மரத்தின் கீழ் இன்னும் இருக்கின்றேன்

மறுபடியும் மறுபடியும்

அழுத்தி அழுத்தியே நகரும்

நிழல்

----------------------------------------------

மிகப் பிரமாண்டமாய்

சிறகு விரித்து அசைத்து

திரும்புகிற வரையில் இடம் தெரியாதபடி

பற்ந்து போனது மனம்

உணர்வுகளுடன் புலன்களை விட்டு விட்டு

உட்கார்ந்திருந்தேன்

அவசியத்துக்காய் அசைந்த கரம் பட்டு

அரைகுறைத் த்ண்ணீருடன் கீழ் விழுந்து

உடைந்து சிதறியது கண்ணாடிக் குவளை

முதனிகழ்வு புரியாது

அதிர்வுகளில் தழல் பெற்றுக்

கனன்றெரியத் தொடங்கியது

கபாலம்

-------------------------------------------------------------

இரு இரு என்று ம்ணல்வெளி தடுக்கும்

ஒட்டிய மணல் உதிர்ந்து விழ

உதிர்ந்த சோகங்கள்

மறுபடியும் ஒட்டிக்கொள்ள

எழுந்து நிற்பேன் நடப்பதற்காய்

உயர எழுந்து சுருண்டு உருண்டு வந்து

உடைந்து நொருங்கிய

அலையின் துண்டொன்று

உமிழ்ந்து திரும்பும் தன்நுரை எச்சிலால்

தொடுவான நட்சத்திரங்கள்

கூடவர மறுக்கும்

நிலவு கூடவே வரும்

மேகங்கள் என் திசைக்கெதிராய்

----------------------------------------------------------------------------

மிதமிஞ்சிய சுமைதாங்கி நடக்கிற

ஒரு கழுதையின் முதுகு என் மனம்

பல வகைத் துயரங்களுடன்

துடைக்கவும் அப்புறப்டுத்தவும்

சிந்தனை ஆலாய்ப்பறக்கும்

கனத்தலின் தாங்கமுடியாமை

எழுந்து இலக்கின்றி நடக்க வைக்கும்

அலைச்சல்கள் ஓயா அலைச்சல்கள்

பெருமழையெனத் தொடர்ந்து

ஈவிரக்கமின்றிக்

கொட்டோ கொட்டென்று

குறுக்கிடுபவைகளின் தரிசிப்பு

நிரந்தரமாய் ஒட்ட மறுக்கின்ற

சினேகிதங்களின் கேலிப்பேச்சுக்கள்

ஓசியில் கிடைக்கின்ற சிகரெட்டின்

புகை வளையங்கள் போல்வன

துடைத்தலையும் அப்புறப்படுத்தலையும்

தனிமையில் திருமபுகையில்

சுமையேறக் கழுதை நடக்கும்

பழைய மழை அடித்துப்

பின் மீழவும் ஒருமுறை

துடைத்தலும் அப்புறப்படுத்தலும்

நிகழ்கிற வரையில்.

------------------------------------------------------------------------------------------

முன்னைய வசந்தத்தின் சேமிப்பில்

பச்சை நிறத்திடமிருந்து

அன்னியப்பட்டுப் போகாத சடைத்த செடி

ஒற்றைப் பூவைத் தலையில் சுமந்து

மலட்டினை மீறிய பூரிப்புடன்

பாதிப் பகுதி பட்டுப்போன நிலையில்

பசுமையினை ஒருபுறம் தாங்கிய

நெடிதான மரம்

இருப்பில் விசுவாசமுள்ள

ஒரு தெருப்பாடகனாய்

மயானத்தின் மேல்

முகவ்ரியிழக்கும் புல் வெளியில்

தனித்து மேய்ந்தபடி

ஓர் ஆட்டுக்குட்டி

மயானத்தைக் கடக்கும்

மின்சாரக் கம்பிகளில்

தேடலில் சோர்ந்துபோன

ஒரு செண்பகம் வெறுமை படர்ந்திட

அதையும் மீறிப் பறக்கின்ற பருந்தின்

வட்டத்துள் சிக்கிய மனம்

வானமிழந்த வீட்டு நினைவோடு

----------------------------------------------------------------------------------------------------------

கனவுக்குவியலுக்குள் அமிழ்ந்து

அடங்கிப் போய்க் கிடக்கின்றேன்

ஒரு நுரைக் குவியலின் அடிப்பகுதியில்

மிக அமைதியாக விறைத்துக் கிடக்கின்ற

ஒரு சவர்க்காரத் துண்டாய்

ஒவ்வொரு குமிழியாய் உடைத்து

உருச்சிதைத்து சிதறிச் சிதறி

காற்றுக்கும் வெய்யிலுக்கும்

கடந்தோடும் கணங்களுக்கும்

முகங்கொடுத்தழியும் குவியல்

அடுத்த குவியலின் சிருஷ்டிப்புக்காய்

கரைந்து தேயத் தயார்படும்

சவர்க்காரத்துண்டு

ஓர் அப்பாவியாய்.

----------------------------------------------------------------------------------------------

மழை ஓய்ந்த நேரமாய்ப் பார்த்து

நின்றுவிட்ட மின்சாரத்தின்மீது

ஆத்திரம் ஆத்திரமாய்.....

அறைக்கதவு திறக்கப்படினும்

அவசரத்துக்கு வரமறுக்கிற வெளிச்சம்

சீச்சீ...................

தடுமாறலில் கண்டுபிடித்த

மெளுகுவர்த்தியுடன்

ஒரு கையில்

தீப்பெடியும் வெப்பமிழந்துபோக

நமுத்துப்போன குச்சிகளை

ஒவ்வொன்றாய் உரசி உரசி அலுத்து

இவ்வளவு குச்சிகளுக்குள்ளும்

இந்த இருளைச் சப்பித் தின்னக்

கிழிபட முடிந்த தீக்குச்சியைத்

தேடி எடுக்க முடியாமல்

திணறிப் போக....

கிண்டல் பண்ணுகிற மாதிரி

ஒருமுறை வந்து--

மறுபடியும் நின்றுபோகும்

மின்சாரத்தின்மீது

இன்னும் ஆத்திரம் அத்திரமாய்.........

----------------------------------------------------------------------------------------------------

கழுத்தை நெரிக்கிற துயரங்கள்

ஒட்டிப் பிறந்ததாய் உரிமை கொள்கிற

ஒப்பனைகள்

பழமைகள் மிகப் பழமைகள்

அனைத்தையும் வேறு வேறாய்

சிலுவைகளில் அறைந்து கொன்றேன்

திருப்தியுடன்

திரும்பி நடக்கையில்

புன்முறுவலுடன்

கைகுலுக்க முன்வந்தவைகள்

துயரங்கள்

ஒப்பனைகள்

பழமைகள்

------------------------------------------------------------------------------

இந்தப் பெரிய கியூவில்

என்னுடைய முறை வந்து

எப்பொழுது நான் வீட்டுக்குச் செல்வது

என்னுடைய வீட்டுக்கு

கடைசியும் அதுவுமாய் நிற்கின்றேன்

வாழ்க்கையின் நெரிசலில் ஊர்ந்து

நசுங்குற மனமுமில்லாமல்

தூ.........ரே

ஒதுங்கிப் போகவும் முடியாதபடி

கடைசியில் அதுவுமாய் நிற்கிறேன்.

க்யூவின் நீளுகை அதிகரித்து

நெரிபட்டு நெரிபட்டு முன்சென்று

முன்னுணரப்படாத ஒரு கணத்தில்

க்யூவல் நான் வெளிப்பட்டு

நெரிசலில் கீலம்கீலமான இதயத்தை

ஒட்டிச் சரிபார்த்துக் கொண்டு

நுழைய முடிகிறது இன்னொரு க்யூவில்

எப்பொழுது நான் வீட்டுக்குச் செல்வது

என்னுடைய வீட்டுக்கு.

-----------------------------------------------------------------------------------

வட்டமிட்டு வட்டமிட்டு

வட்டத்துள்ளேயே

இருத்தலும் நகர்தலும் கூடுமாயினும்

முனைமீறிப் பறத்தல் தவிர்த்து

நுனிபிடித்து தொங்க நேரிடின்

தொட்டபடி

இருக்கும்

பாதங்கள் வட்டங்களைத்

தொட்டபடி இருக்கும்.

--------------------------------------------------------------------------------------------------

புள்ளிகளில் நின்றபடி

பறக்கிற கனவுகளை

இப்போதைக்குச் சேமித்துவை

நடந்து முடிப்பதற்கே

நிறைய இருக்கிறது இன்னும்

சிறகுகளைக் கத்தரித்துவிட்டு

கைகோர்த்துக்கொள்

நடக்க ஆரம்பிப்போம்.

-----------------------------------------------------------------------------------

போகிறேன்..............

திரும்பிப் பார்த்து திரும்பிப் பார்த்து

சுவடுகளை விழுங்கியபடி.

போகிறேன்......

இந்தப் பாலை வெளியில்

கால்கள் புதையும்

புயல்களும் வலுவுடன் வீசும்

கூடாரமடித்து உட்கார்ந்து விடுகின்ற

தளைகளை அணிந்த கனவுகளைத்

தூரே வீசிவிட்டு

வெறுமையுற்ற கைகளுடனும்

மனத்துடனும் போகிறேன்.....

திரும்பிப்பார்த்து திரும்பிப்பார்த்து

சுவடுகளை விழுங்கியபடி

போகிறேன்.

-------------------------------------------------------------------------------------

இந்த நாய்

நாயைப் பார்த்துக் குரைத்தது

அதற்கப்புறம்

மரத்தைப் பார்த்து

நிலவைப் பார்த்து

மனிதனைப் பார்த்து

நிழலைப் பார்த்து

தன்னைப் பார்த்து

குரைத்துக் கொண்டது

இப்பொழுது

பிரபஞ்சத்தைப் பார்த்துக்

குரைக்கத் தொடங்கியிருக்கிறது

----------------------------------------------------------------------

பெரு விருட்சம்மீது

ஒரு மரங்கொத்திப் பறவை

அலகு பதிக்கும் புள்ளியில்

வாழ்க்கை

கண் அற்று கால் அற்று

நக்கரித்து நக்கரித்து..................

எனினும்

உயிருருவும் விர்ல்களிடை

சுழலும் உலகு எனதல்ல

நமது.

----------------------------------------------------------------------

அவசரமாய் மிக அவசரமாய்

பூமியை ஸ்பரிசித்து விடுகின்ற

அதீத நேயங்களுடன்

ஒக்கலையில் இர்ந்து நழுவுகிறேன்

பிடித்துக்கொழ்

என்னை நழுவவிட்டு

ஒக்கலையை.

----------------------------------------------------------------

உதறிவிட்டுத்தான் எழுந்து நின்றேன்

மறுபடியும் ஒட்டிக் கொண்டது

தூசு

வெளிற்ற நினைத்து

ஆடைகளில் போட்டு

அழுத்தி அழுத்தித் தேய்த்தது

சோப்பையல்ல

அழுக்கைத்தான்

விழிகளைத் துடைக்கவே

விரல்களுக்கு அனுமதிப்பு

விளிகள் குடையப்பட்ட பின்புதான்

விழிப்பே வருகிறது

எந்த உணர்வுகளாயினும்

இதயத்திற்குள்ளேயே

அவலங்களாகிப் போக

ஊறிவருகின்ற எச்சிலால்

என்னை நானே

துப்பி நனைத்துக் கொள்கிறேன்

எனக்கேது சொரணை.

------------------------------------------------------------------------------

பதிவாயும் உயரமாயும் நிற்கிற

இவ் வேலிகளுக்கப்பால்

தரிசிப்புக்கு உருக்களாய்

உண்மைகள் பல உள

விழிகளூடே புகுந்து

நேற்றைக்கோ சற்றைக்கு முன்போ

அன்றேல் எப்போதோ பதிந்து கொண்ட

உண்மைகள் பல உள

வேலி மீறி ஏன் அவை

புலப்படவில்லை எனக்கு

அப்பால் என்பது நிஜமாயின்

புலப்படலே சாத்தியம்

மெய்மைக்கு மறைவின்றேல்

எரிந்து கருகும் வரை தீமூட்டு

வேலி என்பது பொய்.

--------------------------------------------------------------------------------------------

தூக்கத்திலிருந்து

இடப்பக்கமாய் ஓடத்தொடங்கியது

என்வீட்டு மணிக்கூடு

விழித்து

பேந்தப் பேந்த விழித்தேன்

கிட்டிப்புள்ளையும் பறித்து

குழியையும் மூடிவிடப்

பேந்தப் பேந்த விழித்தேன்

நகர்தலில்

நகர்ந்த சூரியனும் கழன்று விழுந்து

நீரூற்றுக்கள் வற்றிப்போக

கை கொட்டிச் சிரித்தன

கழுகுகளும் மிசாக்கரடிகளும்

வெளிச்சம் வர

இமை திறக்கும் வரை

இறந்து போய்க் கிடக்கிறேன்

என் இரத்தத்தை

நானே முத்தமிட்டபடி.

----------------------------------------------------------------------------------------

திசை என்று நீ கருதுகிறபடி

விரும்பியவாறு பெயரிட்டு

எங்கு நோக்கினும்

சுமக்க முடிந்த கற்களை விட்டெறி

பெரிய பாறாங் கற்களைக்

கடப்பாரை கொண்டு புரட்டிநகர்த்து

பற்றைகளை வெட்டி மைதானமாக்கு

ஓய்வுறுகையில்

உனது மீள்த்தொடங்கும் அடியெடுத்து வைப்பு

எப்பக்கத்தை நோக்கி என்பதில்தான்

எனது கவனம் நிலைத்துள்ளது

எறிந்து நகர்த்தி புரட்டி

விரும்பியவாறே........

-----------------------------------------------------------------------------------

என் தவம் தொடங்கியாயிற்று....

அறைபட்ட கன்னங்களையும்

சிலுவை சுமந்த முதுகுகளையும்

வெள்ளை நிறம் பூசப்பட்ட

கழுகுகளின் பிராண்டல்களையும்

விழிகளுக்குள் விழுங்கிக் கொண்டு

கண்ணீர் வர மறுத்துக்

கசிவிழந்த இமையோரங்கள்

திசைதோறுமிருந்து தெறித்த

இரத்தத் துளிக்களால் உயிர்ப்புற

ஒரு வீர அனுமன் வேகம் வேண்டி

என் தவம் தொடங்கியாயிற்று.....

எனக்கு வால் முளைத்து வரும் போது

தீ மூட்டி விடுங்கள்

இந்த இலங்காபுரிகளை

ஒருமுறை

எரித்துப் பார்க்க வேண்டும்.

------------------------------------------------------------------------------------

முள் குத்திய பாதங்களைக்

காலணி காத்தது

கடந்து போகையில்

கழிந்த கணங்களால்

பசியெடுக்கக்

கனிமரங்கள் கைகொடுத்தன

கானல்களையும் தாண்டி

நீரோடை அருகமர்ந்து

தாகமும் தீர்த்தாயிற்று

வெய்யில் தகிக்கிறது

இனி ஒரு மர ஈழலுக்காய்

என் தேடுதல் தொடங்கும்.

-----------------------------------------------------------------------------

சர்வத்த்தையும் காற்றுத் தழுவுகிறபோது

எழும் சுகத்தை யார் தருவர்

பெருவளியில் சஞ்சரிப்பதே சுதந்திர

முழுமை

அதனால்தான்

சுமைகள் தவிர்த்துக் கட்டுக்களை விடுவிக்கத்

துடிக்கிறேன்

விழுதல் தொடர்ந்து நேரிடினும்

மூச்சை இழக்கத் த்ரப்பட்டுள்ள அவகாசத்தை

முயல்தலுக்கே தந்து விடுகிறேன்.

------------------------------------------------------------------------------------

காற்றுவாக்கில் போகிறேனாம்

பொய்

முரட்டுத்த்தனமாய் இழுபட்டு

மிதிபடுகிற பொழுதே

நகரமுடிகிறது என்னால்

காயத்தின் மேல் காயங்களும்

என் படுக்கையில் முட்களும்

கனவுகளில் கூட

பெரிய பெரிய பாதங்கள்

காற்றுவாக்கில் போகிறேனாம்

பொய்.

-------------------------------------------------------------------------------------------

இருப்பேன் என்பது நிச்சயமே

உன் வருகையில் தகர்ந்து

அநந்தரமாகும் என் பயணம் பற்றியே

பயம்

வானம் இறங்கி வருகிறது

சமுத்திரங்களும் முத்தமிடுகிறது

என் மணற் கரைகளில் உன்

ராட்சதச் சுவடுகள்

கணம் கணம் கண்டு

வெளியின் பெருமூச்சில்

சரியாத என் மரங்களும்

குப்புற விழுகின்றன

நெருங்கிக்கொண்டே கேள்

எனக்கென்னவோ

பயணித்துக்கொண்டிருக்கத்தான்

தோணுகிறது.

-----------------------------------------------------------------------------------

திசைகளின் சுருக்குக் கயிறுகள் அறும்

சந்திப்புக்களுக்கப்பாலும் நீளுகிற

பெறுவெளியின் வியாபிப்பில்

எனது பயணம் வலுப்பெறும்

கரையில் நின்று

அலை இறப்பதாய் நினைக்காது

அமிழ்ந்தும் தலையுயர்த்தியும்

கடலுள் இறங்குகையில்

அலையின் உயிர்ப்பைப்

புரிபவன் ஆயினேன்

தொடக்கம் எதுஎன்றும் இன்றி

உச்சி அல்லாத

ஒரு புள்ளியில் நின்று

குதித்துக்க் கொண்டிருப்பேன்

மோதி அன்றேல் குப்புற விழுந்து

சிதறுதல் திண்ணம்

இறப்பு இன்றி

ஏதோ ஒரு புள்ளியில்

உயிர்ப்புடன் இருப்பேன்.

---------------------------------------------------------------------------------

கைகளுக்குள் வசப்பட முடிந்த

ஒளிக்கீற்று மறுதலிப்புடன்

வெகுதூரம் போய் விட்ட பிறகு

தூக்கத்தைப் பறித்து

மிகக் குரூரமாய்ச்

சண்டை செய்கிற இரவுகளே

வந்து போகின்றன

காத்திருக்கிறேன்

மறுபடியும் காற்று வந்து

என் மூங்கில் காடு

தீப்ப்ற்றி எரியுமென்று.

---------------------------------------------------------------------------------

கலைகளிலாயினும்

உயிர்த்தெழுகிற விருப்புகளுடன்

என்னுள் நுழைந்து

என்னைத் தேடி வெளிக் கொணர்ந்து

இடைவெளியின்றிக் காலத்திற்குப் பின்னால்

ஓட முற்படுகிறேன்

நானே காலமாகிவிடத்

துடிக்கிற முனைப்புடன்

முளைத்தலிலிருந்தே

தாழ்ந்த குரலிலான கட்டளைகளைத்

தூண்டுதல் என நினைத்துச்

சுயத்தினை இழந்து போனேன்

பிரபஞ்சப் பெருவெளியில்

ஒரு சிறு அணுத்ததுண்டாய்

என் முகத்தையும் தொலைத்துவிட்டு

இருந்தேன் ஒரு சப்பாணியாய்

தவறவிட்ட கணங்களின்

புரியாமை மூடுதலில்

முளைத்து வந்த சிறகுகளும்

மறந்தே போயிற்று

நடத்தல் எனக்கு இயலாததல்ல

மூன்றாவதாய் எனக்கொரு

பாதம் தேவையில்லை

கைத்தடியைத் தூரே எறிந்துவிட்டு

எழுந்து நடக்கத் தொடங்கியிருக்கிறேன்

சொர்க்கமோ தேவதைகளோ

எனக்கு வேண்டாம்

முட்டியோ மோதியோ

தலைகீழாய் நின்றபடியோ

என் தரிசிப்பிற்கு சுதந்திரம் இருப்பின்

அதுவே போதும்

காலத்தின் பின்தொடர்தல்

என்னையும் நிர்வாணமாக்கும்

என்கிற நம்பிக்கைக் கீற்றில்

கணங்களைக் கொளுத்தி

என்னைப் பட்டை தீட்டிக் கொள்கிறேன்

மூச்சறுந்த மரணத்தின் சுவடுகள்

என் பாதங்களுக்கிடையில்

மூர்ச்சையுற

என் வெளிச்ச நோக்குகை

இன்மையை விரட்டுகிறது

ஒரு கடிகாரத்தின் முட்களாய்

ஒரு வசந்தகாலக் குயிலாய்

வெய்யில் காலத்தில் புழுங்கி வியர்க்கின்ற

ஒரு மனித மேனியாய்

இருந்து கொள்ள நினைக்கின்றேன்

முற்றுப்புள்ளிகள்

முணுமுணுக்கின்றன என்பதற்காகத்

தகர்ந்து போகாமல் இருப்பதில்லை

நிரந்தரங்கள்

வாடைத் தவிர்ப்பிற்காய்

அத்திசைக் காற்றுக்கு

ஜன்னலைச் சாத்தியுள்ளேன்

நான் கொளுத்துகிற மெழுகுவர்த்திகள்

அணைக்கப்பட்டாலும்

ஒவ்வொரு விடியலிலும்

தரிசனம் தருகிற ஒரு சூரியன்

என்னுள்ளும் ஒரு சூரியனை

இருத்திவிட்டுப் போகிறது

தேடலின் வியாபிப்பில்

உள்ளவைகள் சிறியனவாக

புதிய தரிசனங்களில்

என் பழைய முகங்கள்

உதிர்ந்து போகின்றன

புலன்கள் இசைகிற

தொலைவுகளுக்கப்பால்

என் மனக் குதிரை

மிக அவதானமாக

புதியன தேடலில்

மிக மூர்க்கத்தனமாக

சவாரி செய்து கொண்டிருக்கிறது

திசைகள் தறிபட்டு

எல்லைகள் நளுவிப்போய்த்

தொலைவு நீளுகிறபோது

நான் பரிநிர்வாணமாய்

நடஏது கொண்டிருப்பேன்

அனைத்திலும்

இருட்டு

அவசர அவசரமாக

ஆடைகளைக் கழற்றிவிட்டு

நிர்வாணமாகிக் கொண்டிருகிறது.

------------------------------------------------------------

எனது நெருப்பு எரியத் தொடங்கி

வெகுகாலமாயிற்று

அணைந்து எரிந்து அணைந்து

எரிந்து அணைந்து எரிந்து

..................

எரிந்தபடிதான் இருக்கிறது

அணைந்தே போகாதபடி

----------------------------------------------------------------------

சிறுதுளையிலும் பலகணியிலும்

குரூரமாய் பற்கள் பதிக்கின்ற மனது

தவங்களும் வரங்களுமின்றி

அஸ்திரங்கள் பெறும் கணத்தில்

நொருங்கும்

காற்றை எட்டிப் பார்க்கமட்டும்

சீட்டு வழங்குகிற சுவர்கள் முளுவதும்

அடிபட்டு நொருங்கும்.

--------------------------------------------------------------------------

அவரைப் பொறுத்து

அதுவே பாவமாய் இருந்தது

அதற்கு அவர் பாவமாய் இருந்திருப்பார்

அறைவதற்கு முன்னர்

அதை அவர் சுமந்தார்

அறைந்த பிறகு

அவரை அது சுமந்தது.

--------------------------------------------------------------------

சோகத்தின் இருப்பு

ஒரு கல்லறையாக

உருகிக் காய்ந்த துளிகளின் மீது

உட்கார்ந்திருக்கிறது

ஒரு மெழுகுவர்த்தி.

------------------------------------------------------------------------------

இருத்தல் எழுதல் நடத்தல் என எதிலும்

ஏதோ ஒன்று என் இறப்பின் நிகழ்வுக்காய்

குறிபார்த்துக் கொண்டிருப்பதாக உணர்ந்து

விரல் ஈறாய் சர்வத்திலும் ஐயம் எழும்

அடிக்கடி என்றாயினும் அவ்வப்போது

என் இரத்தத்தை நானே குடித்து

என் சதைத் துண்டுகளை

நானே சப்பித் தின்று

என்னில் பூரணமிழந்து போயினும்

இறப்பின் நிகழ்வு விலகுவதான

திருப்தி வரும்

குறிபார்ப்பு உணர்தலின் உயிர்ப்பு நிலையில்

என் இரத்த வெறி சதைவெறி எதுவும்

அதிகரிக்க

சப்பித் தின்னலும் குடித்தலும்

அற்பமாகும் வரையில்.

-----------------------------------------------------------------

காதலி

உன் வார்த்தைகள் உடுத்தியிருக்கிற

ஆடைகளை அவிழ்த்தெறி

நான் நிர்வாணமாகிக் கொள்கிறேன்

நூறாயினும் என

என்னை இறுகத் தழுவி முத்தமிடு

எஞ்சியிருக்கிற இடைவெளிகளை

காற்று நிரப்பட்டும்

தோப்புக்குள் ஒதுங்குதல் இன்றி

ஒட்டியுள்ளதைத் துடைத்தெறிந்துவிட்டு

வா

இந்தப் பெருமணல் வெளியில்

புணர்ந்தெழுவோம்.

--------------------------------------------------------------------

கோடி முகங்கள் சரியத் தொடங்கியுள.

படிப்படியாக.....

கிரகிப்புக்கும் தோலுரிப்புக்குமாய்

கிரமம் பெறுகிற புலன்களின்

ஒளிர்தலுக்கு அப்படி ஒன்றும்

சூரியன் அவசியமில்லை

தழும்புகள் பதிந்த

மிகப் பழைய முகங்களது

பொய்மைகளின் சிதைவுகள்

சுடரத் தொடங்கியுள்ள எனது

ஆத்துமத்தின் பலம் பொருந்திய

பாதங்களுக்குக் கீழ் தான்

உதிரும்................ உதிரும்

உதிர்தலின் தொடர்தலில்

எனது விருப்புகளுள்

என்னை நானே பார்க்க வேண்டும்

நான் கவிதைகள் எழுத வேண்டும்.

---------------------------------------------------------------------

எனது ஆதியில்

கடவுள் எங்கோ இருந்தார்

விதம் விதமாய்

மனதுள் தோற்றம் காட்டி

எங்கோதான் இருந்தார்

பின்

எங்கும் இருப்பதாகப் புலப்பட்டு

சமீபமாகி

எனக்குள்ளேயும் இருந்தார்

என்னுடையவராகவேதான்

இவரின் தொடக்கம் என

உனரத் தலைப்பட்டபின்

இவரே இல்லாமலேயே

இருக்கிறார் தான்

ஐயோ கடவுளே!

-------------------------------------------------------------------------------

கால் எது

தலை எது

இடைநடுவில் தொடங்கி

இடை நடுவில் முடிந்து போகிறது

தொடங்கியதற்கு முன்னரும்

முடிந்துபோனதற்குப் பின்னரும்

இன்னும் உண்டு

பின்

கால் ஏது தலை ஏது.

-----------------------------------------------------------------------------------------

இது பசி இது விரகம்

இது வறுமை இது சுரண்டல்

இது காயம் இது இரத்தம்

இது துப்பாக்கி இது மரணம்

இது துயரம் இது கண்ணீர்

இது விரக்தி இது தற்கொலை

இது அவஸ்தை இது போராட்டம்

இது வளி இது விசும்பு

இது கடல் இது மளை

இது வெளிச்சம் இது பனித்துளி

இது பறவை இது பாட்டு

இது காற்று இது மூச்சு

சலித்து சோர்வுற்று

சாகலாம் போலிருக்கிறதா

மூதேவி

வாழ்க்கை உனக்குப் புரியப் போவதிலை

போ.

-------------------------------------------------------------------------------------

முடிவுற்ற இழையென ஊரும் பாதையில்

வண்டி புறப்பட்டு விரைகிறது

எரிபொருள் நெடியில் குமட்டும் வயிறு

தூசுப் படலம்

கண்கரிப்பும் தும்மலும் சலிப்பும்

அஜாக்கிரதையில்

எலுமபு மூட்டுகள் விலகிப்போகும்

கரடு முரடாய் மேடு பள்ளம்

மேகம் ஓடிப் போகும்

இலையுள்ள மரமும்

இலையற்ற மரமும்தான்

கூட

இருள் ஒளி வெயில் நிழல்

முன்புறக் கண்ணாடி மீது

சராலென விழுந்து எம்ப முடியாது

அலைக்கழிக்கப்படும் பட்டாம்பூச்சி

திருப்பத்தில்-

இறக்கையின் சிறு துண்டிழந்து

தன்பாட்டில் பறப்பு

மின்னல்

துயரில் அமிழ்ந்து எதிர்கொள்ளத்

தானே நெறிப்படுகிறதாக்கும்

வாழ்க்கை.

-----------------------------------------------------

சிறகடிப்பிலிருந்து விடுபட்டு

மின்சாரக் கம்பிகளில் தொங்கி

ஊன் வடிந்து சிதைந்து கொண்டிருந்தேன்

ஒரு முதிர்ந்த வௌவாலாய்

சற்றைக்கு முன்

முற்றத்துச் செடியில் உட்கார்ந்த ஆந்தை

கபாலத்துள் அலறுகிறது

பனிக்காலம் முடிந்ததும்

பூக்களின் மீது ஒரு வண்ணாத்துப்பூச்சியாய்

ஒரு கறுத்த மமுகில் துண்டாய்

அலங்காரத் தொட்டிக்குள்

ஒரு பிளாக்மோறிஷாய்....

..................

என் இருப்பு நீளும்.

-------------------------------------

படித்து முடித்த பின்பு

சலிப்பபுற்ற தனித்தல் 'அந்நியம்' வரை அழைத்துச் செல்லும். இந்நிலையை எதிர்கொள்வதிலேயே வாழ்வின் மீதான தீராக்காதல் துளிர் கொள்கிறது. இதற்கு வாழ்தல் பற்றிய திடமான நம்பிக்கை அவசியம்.இந்நம்பிக்கையுடன் வாழ்வின் உள்முகம் தேடிய எனது பேரார்வத்தின் வெளிப்பாடுகளாகவே இக்கவிதைகளைக் கறுதுகிறேன். இக் கவிதைகளின் காலம் மிக முக்கியமானது. முரண்பாடு, சார்பு, வழிபாட்டுத்தனம், ஆக்கிரமிப்பு, கொலையுணர்வு என்பவற்றின் வெம்மை உச்சத்திலிருந்த காலம். இக் காலத்து அனுபவங்களும் துயரங்களும் எவர்க்கும் பொதுவானவை. இவை எழுதப்பட்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் நூலுருவாக்கப்படும் இன்றைய நிலையிலும் இக் கவிதைகளில்,

சிதைவினூடும் துயரினூடும் நிமிர்ந்தெழுகின்ற ஓர் உள்ளோட்டம் இருப்பதாகவே படுகிறது.

இக்கவிதைகளை அவ்வப்போது பிரசுரித்த திசை, இன்கிலாப், வகவம், விடிவு, முனைப்பு, கலங்கரை, ஆகவே, நிழல் என்பவற்றுக்கும் மு.பொன்னம்பலம், அ.யேசுராசா, கோவை ஞானி, எம்.ஏ.நுஃமான், மருதூர் பாரி, தி.கேசவன், எம்.கே.எம். ஷகீப், வை.ஜெயமுருகன், சு.இராஜதுரை என்பவர்களுக்கும் என் நன்றிகள்.

மு. அ. இ. ஜபார்.

திருக்கோணமலை.